காஷ்மீர் மக்களின் இன்றைய இருண்ட வரலாற்றில்
கடந்து போன காலத்தின் 1947-அக்டோபர்
22-24 தேதிகள் முக்கியமானவைகள். விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட இந்திய,
பாகிஸ்தான் (இந்தியாவின் விஸ்தரிப்பு எண்ணங்களை விட பாகிஸ்தானுக்கு அப்படி
ஒன்றும் அதிகம் இல்லை) நாடுகளுக்கு
மத்தியில் அகப்பட்டுக் கொண்ட சின்னஞ்சிறு அழகிய
காஷ்மீர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காகப்
போராடி இறுதியில் இந்தியாவால் அபகரிக்கப்பட்ட வரலாற்றைச் சுமந்த கருப்பு நாட்கள்
அவை. 77% முஸ்லீம்களைக் கொண்ட காஷ்மீர், பாகிஸ்தானோடு
ஏன் இணையவில்லை என்று - மதவாதக் கண்ணோட்டம்
கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஜின்னா காஷ்மீர்
இந்து மன்னன் ஹரிசிங்கிடம் பேச
தூதரை அனுப்பினார். ஆனால் ஹரிசிங் தான்
ஒரு சுற்றுலாப் பயணியாகக் கூட பாகிஸ்தான் வர
விரும்பவில்லை என்று பதிலனுப்பினார். இது
எனது விருப்பம் மட்டுமல்ல காஷ்மீரிகளின் விருப்பமும் கூட என்று அவன்
சொன்ன தகவலைக் கொண்டு சென்றவர்கள்
ஹரிசிங்கை வழிக்குக் கொண்டுவர யோசித்ததில் கடைசியாகச் செய்ததுதான் பத்தான் பழங்குடிகளை ஏவி
காஷ்மீரைக் கைப்பற்றி பாகிஸ்தானோடு இணைப்பது என்கிற திட்டம்.
காஷ்மீரில் பெரும்பாலான முஸ்லீம் மக்களின் மன்னனாக இந்து ஒருவர்
இருக்கிறார்; அவர் விரைவில் காஷ்மீரைக்
கொண்டு போய் இந்தியாவோடு இணைத்து
விட்டால் இந்துக்களின் ஆட்சியின் கீழ் பெரும்பாலான முஸ்லீம்கள்
அவதியுறுவர் என்று பழங்குடிகளின் மூளையில்
படுவேகமாக ஏற்றப்பட்டது மதம் என்னும் விஷம்.
இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் சைரப் கயத்
கான் (sairab khayat khan)
தலைமையில் நடத்தப்பட்ட முதல் புனிதப் போர்
பத்தான் பழங்குடிகளின் படையெடுப்புதான் என்கிறது வரலாறு. நீண்டகாலமாக சமவெளிச்
சமூகங்களால் புறக்கணிக்கப்பட்ட கோபமும், மறுக்கப்பட்ட நீதியுமாக குமுறியிருந்த பத்தான்களின் மனதில் இந்திய வெறுப்பை
மூர்க்கமாக ஏற்றி உசுப்பேற்ற - 1947, அக்டோபர்
24 இரவில் காஷ்மீர் பள்ளத்தாக்கை பெரும் ஆயுத பலத்தோடு
தாக்கினார்கள் பத்தான் பழங்குடிகள்.

இந்தியா எப்போது உருவானது,
உருவாக்கப்பட்டது? பல்வேறு சமஸ்தானங்களாக தனித்தனி
பிரதேசங்களாகப் பிரிந்து கிடந்த இந்தப் பகுதியை
அராபியர்களும் பின்னர் வந்த பிரிட்டீஷாருமே
இந்தியா என்று அழைத்தனர். இந்தியா
என்று அழைத்தனரே தவிர இந்தியா ஒரு
நாடே கிடையாது. அது 1948-க்குப் பின்னர் உருவாக்கப்பட்டதே.
பரந்துபட்ட இந்தியாவை உருவாக்க விரும்பிய ஆங்கிலேயர்களும், அவர்களால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் ஆளும் வர்க்கங்களும் சமஸ்தான
மன்னர்களின் கருத்தை அறிய 565 உறுப்பினர்களைக்
கொண்ட இந்திய சமஸ்தான இளவரசர்கள்
சபையைக் கூட்டினார்கள். அதில் கலந்து கொண்டு
பல மன்னர்களும் அவர்களின் திவான்களும், நவாப்களும் சமஸ்தானம் போனாலும் பரவாயில்லை மான்வேட்டை, சிங்க வேட்டை உரிமை
எங்களுக்கு வேண்டும், மாளிகையை மட்டுமாவது விட்டு விடுங்கள் என்று
கேட்டுக் கொண்டிருந்தபோது, காஷ்மீர் மன்னன் இதற்கு உடன்பட
மறுத்தான்.
ஹரிசிங்கிடம் மவுண்ட் பேட்டன் எதிர்கால
இந்திய அரசின் சார்பில் தான்
ஒரு வாக்குறுதியை வழங்குவதாகவும் இயற்கையாகவே இங்கு (காஷ்மீரில்) முஸ்லீம்கள்
பெரும்பான்மையாக வாழ்வதாலும் பூகோள ரீதியாக காஷ்மீர்
பாகிஸ்தானுடன் இணைய விரும்பினால் அதை
இந்தியா புரிந்து கொள்ளும் என்றும் ஆட்சேபம் தெரிவிக்காது
என்றும் மேலும் ஹரிசிங் ஒரு
இந்து மன்னராக இருந்தாலும் அவரை
வரவேற்பதாகவும் தனது புதிய பாகிஸ்தான்
டொமினியனில் அவருக்கு மிக்க கவுரவம் வழங்கப்படும்
என்று ஜின்னா தங்களிடம் உறுதி
அளித்திருப்பதாகவும் கூறுகிறார்.
மவுண்பேட்டனுக்கு பதிலளித்த ஹரிசிங் "எந்தக் காரணத்திற்காகவும் பாகிஸ்தானுடன்
இணைய நான் விரும்பவில்லை" என்கிறார்.
''நல்லது அது உங்கள்
விருப்பம். ஆனால் சனத்தொகையில் 90% பேர்
முஸ்லீம்கள். ஆகவே இதை நீங்கள்
கவனமுடன் பரிசீலிக்க வேண்டும். பாகிஸ்தானுடன் இணைய விருப்பம் இல்லை
என்றால் இந்தியாவோடு இணைந்து கொள்ளலாம். அப்படி
இணைந்தால் உங்களின் எல்லைகளைப் பாதுகாக்க ஒரு காலாட்படைப் பிரிவை
இங்கே அனுப்பி வைக்கிறேன்" என்கிறார்
மவுண்பேட்டன்.
''இல்லை இந்தியாவுடன் சேரவும்
நான் விரும்பவில்லை, நான் சுதந்திரமாக இருக்கவே
விரும்புகிறேன்" என்றான் மன்னன் ஹரிசிங்.
பாகிஸ்தானோடு
அல்லது இந்தியாவோடு என்ற இரண்டு தேர்வுகளில்
ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு மவுண்ட்பேட்டன் நிர்ப்பந்தித்தபோதும் ஹரிசிங் இந்தியாவிடமிருந்தும் பாகிஸ்தானிடமிருந்தும் சம தூரத்தில்
விலகி இருந்தான். இரண்டு கழுகுகளில் ஏதேனும்
ஒன்று தன்னைக் கொத்தித் தின்னும்
என்பதையறியாத ஹரிசிங்கும் காஷ்மீர் மக்களும் உண்மையான மதச்சார்பற்றவர்களாக இருந்த வரலாறு இதுதான்.
தனித்து சுதந்திரமாக வாழ
விரும்பிய காஷ்மீரை பத்தான் பழங்குடிப்படை நெருங்கி
விட்டது. வருகிற வழியெங்கும் அவர்கள்
ஒரு இடம் விடாமல் கொள்ளையடித்து
பெண்களையும் பாலியல் வன்முறை செய்து
முன்னேறினார்கள். ஜீலம் ஆற்றுப்பாலத்தைக் கைப்பற்றி
அவர்கள் சிறிநகரை அண்டியபோது பத்தான் பழங்குடிப்படை காஷ்மீரைத்
தாக்குகிறது என்ற செய்தியை புதுடில்லிக்குச்
சொன்னவர் பிரிட்டீஷ் அரசின் படைத்தளபதியாக இருந்த
டக்ளஸ் கிரேசேதான். ஹரிசிங் தன் படைகளைத்
திரட்டி பத்தான்களிடமிருந்து காஷ்மீரைக் காக்க போருக்குத் தயாரானான்.
அவனது படைத் தளபதிகளில் பலர்
பத்தான்களுடன் கடைசி நேரத்தில் இணைந்து
நின்று துரோகம் செய்தனர். பலவீனமான
ஹரிசிங்கின் படைகள் பாகிஸ்தான் பின்னணியில்
இருக்கும் படைகளோடு போரிடும்போது, மவுண்ட்பேட்டனும் நேருவும் இணைந்து செய்த ஆக்ரமிப்புதான்
காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தது.
காஷ்மீரில் பிறந்த பண்டிட் இனத்தைச்
சார்ந்த பார்ப்பனரான நேருவுக்கு எப்போதுமே காஷ்மீர் மீது அலாதியான விருப்பம்
இருந்தது. நேருவின் அகண்ட பாரதத்தின் ஒரு
அங்கமாகவும் அழகிய காஷ்மீர் இருந்தது.
இந்தியாவை மையப்படுத்தி மேற்காசியா முதல் பசிபிக் பகுதி
வரையிலான பரந்துபட்ட பல தேசிய இனங்களைக்
கொண்ட ஓர் அரசை உருவாக்க
வேண்டும் என்பது நேருவின் கனவு.
ஒரு வழியாக சமஸ்தானங்களை அதட்டி
மிரட்டி ஒருங்கிணைத்து ஓர் இந்தியாவை உருவாக்கிவிட்ட
போதிலும் 1956, மே 10-ஆம் நாள்
மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் ''அடிப்படையான
உண்மை என்னவெனில் இன்னும் இந்தியா ஓர்
ஒன்றுபட்ட தேசமாக மாறவில்லை" என்று
எழுதுகிறார்.
நேருவின் விஸ்தரிப்பு எண்ணங்கள் எவ்வளவு பெரியது எனபதைப்
பாருங்கள் “இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தை அரசியல் பொருளாதார ரீதியில்
மேலாதிக்கம் செலுத்தும் வாய்ப்பு இந்தியாவிற்குள்ளது. இந்தியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான்,
பர்மாவை உள்ளடக்கிய தெற்காசிய கூட்டமைப்பை நான் விரும்புகிறேன். இன்றைய
உலகில் இரு வல்லரசுகள்தான் உள்ளன.
ஒன்று அமெரிக்கா இன்னொன்று ரஷ்யா. நாளைய உலகில்
இன்னும் இரு வல்லரசுகள் இருக்கும்.
ஒன்று சீனா இன்னொன்று இந்தியா.
ஐந்தாவதாக ஒரு வல்லரசு இருக்காது"
என்று 1945-ஆகஸ்டில் தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார்.
பெயரளவுக்கு நேபாளம் தனிநாடாக இருந்தாலும்
அதுவும் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும்
தனது ஆதிக்கத்தை நிறுவுகிறார் நேரு. இன்றைய இலங்கையையும்,
பாகிஸ்தானையும் இந்தியாவோடு இணைத்துக் கொள்ளும் விருப்பம் நேருவுக்கும் சரி காங்கிரசாருக்கும் சரி
இருந்தது. இந்திய முதலாளிகளின் - நிலப்பிரபுக்களின்
நலனை முன்னெடுத்த நேரு சமஸ்தானங்களை உடைத்து
இந்தியா என்ற அகண்ட சமஸ்தானத்தை
உருவாக்கி எல்லா தேசிய இனங்களையும்
அந்த சிறைக்கூடத்தில் அடைத்தார். அதன் அடுத்த பலிதான்
காஷ்மீர்.
களவாடப்பட்ட காஷ்மீர்
ஜின்னாவுக்கு பாகிஸ்தானை ஆக்ரமித்துக் கொள்ள வேண்டும் என்ற
ஆசை. அகண்ட பாரத்தை உருவாக்க
ஆசைப்பட்ட நேருவுக்கும் காஷ்மீரை ஆக்ரமித்துக் கொள்ள ஆசை. மவுண்ட்பேட்டனுக்கோ
காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இருக்கலாம் தனியாக சுதந்திர தேசமாக
இருக்கக் கூடாது என்ற எண்ணம்.
அதிலும் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களாக இருப்பதால்
அவர்கள் பாகிஸ்தானுடன் இணைவதுதான் உகந்ததாக இருக்கும் என்றே கருதினார். காஷ்மீர்
மன்னனின் பிரச்சனையோ வேறு.
அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் மூலம் ரூபாய் 75 லட்சத்திற்கு
விலைக்கு வாங்கிய காஷ்மீர் பள்ளத்தாக்கை
ஜம்மு, லடாக் பகுதிகளுடன் இணைத்து
ஜம்மு - காஷ்மீர் சமஸ்தானத்தை உருவாக்கினான் டோக்ரா மன்னன் குலாப்சிங்.
அவனும் சரி அவனது வழிவந்த
காஷ்மீரின் கடைசி மன்னன் ஹரிசிங்கும்
சரி எல்லா இந்திய மன்னர்களைப்
போலவும் ஆடம்பர வாழ்க்கையையே வாழ்ந்தவர்கள்.
இந்த டோக்ராக்கள் சிறுபான்மை பண்டிட்களிடம் காட்டிய பாசத்தை, பெரும்பான்மை
முஸ்லீம் மக்களிடம் காட்டவில்லை; அவர்களின் நன்மதிப்பைப் பெறவுமில்லை. பெரும்பான்மை முஸ்லீம் மக்கள் கோரமான வறுமையிலேயே
வாழ்ந்தனர். ஆக அடிமை வணிகத்தில்
ஊறிய டோக்ரா மன்னர் மரபுக்கு
தன் சொத்தும் அடிமைகளும் தனக்கே சொந்தமாக இருக்க
வேண்டும் என்கிற ஆசை.
குலாப்சிங் காஷ்மீர் மக்களுக்கும் நிலத்துக்கும் சேர்த்து பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பம் கட்டியது போக
ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீர் மலைப்பகுதி
வெள்ளாடுகளின் கழுத்தில் வளர்ந்த மென்மையான ரோமத்தால்
ஆன ஆறு கம்பளியை வழங்கி
வந்தான். அடிமை வணிகத்தில் டோக்ரா
மன்னன் ஹரிசிங்கிற்கு விற்கப்பட்ட காஷ்மீர் மக்கள் காலம்தோறும் அடிமைகளாகவே
இருந்து வந்தனர். இந்து மன்னனான ஹரிசிங்கை
பெரும்பான்மை முஸ்லீம்கள் ஏற்றுக் கொண்டாலும் ஹரிசிங்கோ
தனது முஸ்லீம் விரோத நடவடிக்கைகளை செயல்படுத்தியே
வந்தான். 1931-ல் சிறிநகரில் மன்னனுக்கு
எதிராக முஸ்லீம்கள் நடத்திய போராட்டத்தில் 22 பேர்
கொல்லப்பட்ட வரலாறும் டோக்ரா மன்னனுக்கு உண்டு.
காஷ்மீரின் மதச்சார்பின்மை வரலாறு இதுதான்.
பத்தான் படையினர் காஷ்மீரை
முற்றுகையிட்டபோது பிரிட்டீஷ் படையினர் அங்கு நிலைகொண்டிருந்தனர். இந்தியாவில்
பிரிட்டீஸ் படையினரின் இராணுவப் பணி முடிந்து விட்ட
நிலையில் அவர்களிடம் ஹரிசிங் உதவி கோரியபோது
மவுண்ட்பேட்டன் பிரிட்டீஷ் படைகளை அனுப்ப மறுத்து
- காஷ்மீர் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு இந்தியப் படைகளுக்கே உண்டு என்று கைகழுவினார்.
பத்தான்களிடமிருந்து காஷ்மீரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் காஷ்மீர் மன்னரிடம்
இருந்து சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைக் கோர வேண்டும் என்று
நேருவிடம் சொல்கிறார் மவுண்ட் பேட்டன். மறுநாள்
இந்திய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்ட முடிவின்படி வி.பி.கிருஷ்ணமேனனையும், இரு
விமானப்படை அதிகாரிகளையும் காஷ்மீருக்கு அனுப்பி வைத்தார் நேரு.
பல்வேறு சமஸ்தானங்களாக சிதறிக்கிடந்த நிலப்பரப்புகளை ஒன்றுபட்ட இந்தியாவாக உருவாக்குவதில் வி.பி.கிருஷ்ணமேனனுக்கு
முக்கிய பங்குண்டு. இந்தியாவின் விஸ்தரிப்புக் கனவுகளில் துருத்திக் கொண்டிருந்த காஷ்மீரை வழிக்குக் கொண்டுவர இதுதான் சரியான தருணம்
என்பதை உணர்ந்து கொண்டவர்கள் பத்தான்களின் முற்றுகையை அதற்கு ஒரு வாய்ப்பாக
பயன்படுத்திக் கொண்டார்கள்.

அக்டோபர் 26-ஆம் தேதி நள்ளிரவில்
சிறிநகருக்கு தப்பியோடினார் ஹரிசிங். தப்பியோடிய ஹரிசிங் மிக மோசமான
அவமானகரமான ஒரு சகதிக்குள் சிக்கிக்
கொண்டார். அன்றைய இரவில் விடிவதற்குள்
நாம் பிடிபடுவதாக இருந்தால் என்னை முதலில் சுட்டுக்
கொன்று விடுங்கள் என்று மன்னர் ஹரிசிங்
தன் உதவியாளர்களுக்கு உத்தரவிடுகிறார். ஆனால் டில்லி திரும்பியிருந்த
மேனன் மீண்டும் அதிகாலையே சிறிநகருக்கு வந்தார். பத்தான்களிடமிருந்து காஷ்மீரைக் காப்பாற்ற படைகளை அனுப்பிய இந்தியா
கூடவே காஷ்மீரை அபகரிக்க வி.பி.மேனனையும்
அனுப்பியது.
இரு தேசங்களிலும் இணைய
மறுத்த ஹரிசிங்கை பாகிஸ்தான் தூண்டுதலில் பத்தான்கள் ஆக்ரமிக்கிறார்கள். ஆக்ரமிப்பாளாளர்களிடமிருந்து காஷ்மீரைக் காப்பாற்றுகிறோம் என்று வந்த இந்தியா
அதை இப்போது ஒட்டுமொத்தமாக அபகரித்துக்
கொள்ளப் போகிறது. இதுதான் இந்த இரண்டு
சண்டியர்களின் ஆக்ரமிப்புக் கதையும்.
பத்தான்களைத் துரத்தி விட்டு காஷ்மீரைக்
காக்க இந்தியப் படைகள் தயாராக இருகின்றன.
மதச்சார்பின்மைக்கு மகுடமாக இருந்த பல்வேறு
இந்தியச் சமூகங்களுள் காஷ்மீரிகளுக்கும் சிறந்த பங்குண்டு. பௌத்த
பிக்குகளின் தலமாகவும், சூஃபிக்களின் தலமாகவும், சீக்கியர்களின், இந்துத் துறவிகளின், கிறிஸ்தவ
மிஷனரிகளின் சேவைத் தலமாகவும் இருந்த
காஷ்மீருக்கு மிக நீண்ட மதச்சார்பற்ற
வரலாறு உண்டு. பத்தான்கள் மிக
மோசமான கொள்ளை, பாலியல் வன்முறை,
கொலைகளில் ஈடுபட்டார்கள். இந்துக்கள், கிறிஸ்தவ பெண் துறவிகள், முஸ்லீம்கள்
என காஷ்மீரை நேசித்த அனைவரையுமே அவர்கள்
வேட்டையாடினார்கள். வி.பி.மேனனோ
காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும் ஒப்பந்தம் ஒன்றை கையில் வைத்துக்
கொண்டு பத்தான்களிடமிருந்து காஷ்மீரையும் உங்களையும் காக்க வேண்டுமென்றால் இந்தியாவோடு
நீங்கள் இணைவதைத் தவிர வேறு வழியில்லை
என்று ஹரிசிங்கின் கழுத்தில் கத்தியை வைத்தபடி நின்றார்.
என்ன செய்வதென்று தெரியாத ஹரிசிங் வி.பி.மேனன் நீட்டிய
இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பல மாதங்கள் நடந்த
போருக்குப் பின்னர் பத்தான்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
காஷ்மீர் இந்தியாவால் அடிமை கொள்ளப்பட்டது.
அக்கிரமமான முறையில் பறித்தெடுக்கப்பட்ட காஷ்மீரோடு மேனன் டில்லிக்குச் சென்றார்.
தான் விரும்பிய காஷ்மீர் தனக்குக் கிடைத்தது தொடர்பாக நேருவுக்கும் மகிழ்ச்சி. அவர்கள் மன்னர் ஹரிசிங்கிற்கும்
சரி காஷ்மீர் மக்களுக்கும் சரி எந்தவிதமான வாக்குறுதிகளும்
அளிக்கவில்லை. அளிக்க வேண்டிய அவசியமும்
இல்லாமல் போனது. காஷ்மீர் பாகிஸ்தானுக்குக்
கிடைக்காத கோபத்தின் உச்சிக்குச் சென்ற ஜின்னா காஷ்மீரிகளை
இந்தியா அபகரித்துக் கொண்டதாகவும், காஷ்மீரிகளுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாகவும்
கூறினார். காஷ்மீர் சர்வதேச அரசியலின் ஒரு
அங்கமாக மாறியபோது, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இது தீராப்பகையை உருவாக்கி
விடும் என்பதை உணர்ந்த மவுண்ட்
பேட்டன் நேருவுக்குக் கொடுத்த நிர்பந்தத்திற்குப் பின்
'காஷ்மீரில் ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்'
என்று அப்போது வானொலியில் நாட்டு
மக்களுக்கு அறிவித்தார். அரசியல் சட்டத்தில் 370-வது
பிரிவு உருவாக்கப்பட்டு இந்தியாவின் பிற பகுதிகளை விட
காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
காஷ்மீரில் ஏனைய இந்திய மாநிலத்தவர்கள்
நிலம் வாங்க முடியாது என்பது
அதில் பிரதானமான விஷயமாகக் கருதப்படுகிறது.
1946 - 1949இல் உருவாக்கப்பட்ட இந்திய
அரசமைப்புச் சட்டத்தில் காஷ்மீருக்கான அரசியல் உரிமைகளும் ஏட்டளவில்
உருவாக்கப்பட்டன, அதில் The Constitution of Jammu
and Kashmir Preamble. - We, the people of the State of Jammu and Kashmir,
having solemnly resolved, in pursuance of the accession of this State to India
which took place on the twenty - sixth day of October, 1947, to further define
the existing relationship of the State with the Union of India as an integral
part thereof, and to secure to ourselves -
… … … … … … … … … … …
… … … … … … … … … … …
… … … … … … … … … … …
… … … … … … … … … … …
IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.
… … … … … … … … … … …
… … … … … … … … … … …
… … … … … … … … … … …
… … … … … … … … … … …
IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.
மேலே உள்ளது ஜம்மு
- காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி.
1. இது என்ன கூறுகிறது?
ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய
நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன்
இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு
இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை
செய்ய வேண்டியும் … … எங்கள் மாநில அரசியல்
அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும்
ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக்கொண்டோம்"
எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள்
ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கும்
இந்திய அரசுக்கும் இடையிலான உறவு - தொடர்பு பற்றிய
ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத்
தாங்களே செய்துகொண்டனர்.
சுதந்தர இந்தியாவுக்கு என்று
எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?
அதன் முகவுரையில் "இந்திய மக்களாகிய நாங்கள்,
1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட
அரசமைப்புச் சட்டம்" என்றே கூறுகிறது. அதாவது
இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் "இந்திய
மக்கள்". ஆனால், காஷ்மீரில் உள்ள
மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர்
மக்கள் அடுத்து இந்திய மக்கள்.
சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை
உடையவர்கள்.
2. 1956இல் நிறைவேற்றப்பட்ட ஜம்மு
- காஷ்மீர் அரசமைப்புச் சட்ட விதி 26இன்படி
- ஜம்மு - காஷ்மீருக்கு ஒரு குடியரசுத் தலைவர்.
அதாவது சர்தார்-இ-ரியாசத்
உண்டு. ஆனால் 1959 முதல் 1965 வரையில் இந்திய அரசு
மேற்கொண்ட அரசமைப்புத் திருத்தத்தின்படி, ‘குடியரசுத் தலைவர்' - (ஒரு தன்னாட்சிப் பகுதியின்
தலைவர்) என்பது ஒழிக்கப்பட்டு, ஆளுநர்
- ஒரு மாநில கவர்னர் என்கிற
பதவியாக அதை மாற்றி, அதிகாரப்
பறிப்பை இந்திய அரசு மேற்கொண்டது.
தேசியக் கொடி
ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச்
சட்டத்தின் விதி 144 அந் நாட்டுக்கு உரிய
தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கிறது.
144. Flag of the
State: - The Flag of the State shall be rectangular in shape and red in colour
with theree equidistant white vertical stripes of equal width next to the staff
and a white plough in the middle with the handle facing the stripes. The ratio
of the length of the flag to its width shall be 3 : 2.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம்கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் மேழி வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும். ( நன்றி வே.ஆனைமுத்து) //
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம்கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் மேழி வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும். ( நன்றி வே.ஆனைமுத்து) //
அளவில் பெரியதும் மக்கள்
தொகையில் சிறியதுமான காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான், சீனா, திபெத், ஆப்கான்
ஆகிய நாடுகளின் எல்லையில் இருக்கிறது. இப்போது காஷ்மீரை இந்தியா,
பாகிஸ்தான், சீனா என மூன்று
நாடுகள் ஆக்ரமித்திருக்கின்றன. காஷ்மீரின் வடபகுதியான சில்ஜிட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை பாகிஸ்தானும், சீன எல்லையை ஒட்டிய
பகுதியை சீனாவும் ஆக்ரமித்திருக்கிறது இந்தப் பகுதியை அக்சாய்
சின் (aksai shin) என்று அழைக்கிறார்கள். இது
போக பெரும்பகுதி ஜம்மு காஷ்மீரை இந்தியா
ஆக்ரமித்துள்ளது. சீன இராணுவத்தின் நேரடித்
தலையீடு காஷ்மீரில் இல்லை என்றாலும் சமீபகாலமாக
சீனாவும் காஷ்மீர் விவாகரங்களில் ஆர்வம் காட்டத் துவங்கியிருக்கிறது.
ஆயுதப் போராட்டத்திலிருந்து மக்கள் வன்முறைக்கு
காஷ்மீரிகளின் தனி நாட்டுக் கோரிக்கை
எண்பதுகளுக்குப் பின்னர் ஆயுதப் போராட்டமாக
வடிவெடுத்தது. இந்தப் போராளிக்குழுக்களில் அடிப்படைவாதக்
குழுக்களும் உண்டு, பாகிஸ்தானிடம் உதவி
பெற்று இயங்கிய குழுக்களும் உண்டு,
இந்தியா உருவாக்கிய குழுக்களும் உண்டு. இந்தியா மற்றும்
பாகிஸ்தானை எதிர்த்து சுதந்திர காஷ்மீர் கொள்கைக்காக நின்றவர்களும் உண்டு. இந்தியாவில் இருக்கிற
இந்து வெறியர்களும், பாகிஸ்தானில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களும் காஷ்மீரில் தலையிட ஆயுதப் போராட்டத்தின்
நோக்கம் சிதைக்கப்பட்டது. காஷ்மீர் குழுக்களின் ஆயுதப் போராட்டமும், அடிப்படைவாத
முஸ்லீம் அரசியலும் இந்தியாவுக்குத் தோதாக அமைய எண்பதுகளில்
இராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை காஷ்மீரில் அமல்படுத்தியது.
1958-ல் ஒன்றுபட்ட இந்தியா
உருவாகத் தடையாக இருந்த தேசிய
இனங்களின் உரிமைக் குரலை நசுக்கி
அப்பகுதிகளை பதட்டப்பகுதிகளாக அறிவித்து மிரட்டி இந்தியாவோடு இணைப்பதற்காக
உருவாக்கப்பட்டதுதான் இந்த சிறப்பதிகாரச் சட்டம்.
1972-ம் ஆண்டு இச்சட்டம் திருத்தப்பட்டு
சித்திரவதை, கடத்தல், பாலியல் வன்முறை, சுட்டுக்
கொல்லுதல் போன்ற உரிமைகளை - இராணுவ வீரர்களுக்கு கட்டற்ற
முறையில் வழங்கி வடகிழக்கு மாநிலங்களில்
அமல்படுத்தியது இந்தியா. எண்பதுகளில் இச்சட்டம் காஷ்மீருக்கு விரிவுபடுத்தப்பட்டபோது இந்தியப் படைகள் ஒரு நரவேட்டையை
நடத்தி ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக்
கொண்டு வந்தார்கள் அல்லது அதை பலவீனப்படுத்தினார்கள்.
இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலான
பதற்றப்பகுதி என்று மத்திய அரசு
உணரும் பட்சத்தில் இந்திய ஜனாதிபதியால் நியமிக்கப்படும்
கவர்னர் மூலமாக அந்தப் பதட்டப்பகுதியை
தன் கட்டுக்குள் கொண்டு வரும் உரிமை
மத்திய அரசுக்கு உண்டு. இதில் மக்களால்
தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசு தலையிட
முடியாது. சட்டமன்றம் கூட இதில் தலையிட
முடியாது. ஆனால் சமீபத்தில் காஷ்மீர்
பிரச்சனைக்கான எட்டு அம்சத் திட்டத்தை
வெளியிட்ட ப.சிதம்பரம் கைது
செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் அவர்கள் மீதான வழக்குகளை
கைவிடவும் மாநில அரசுக்கு உரிய
ஆலோசனைகளை வழங்கியுள்ளோம் என்றவர் சிறப்பதிகாரச்சட்டம் தொடர்பாக
முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே விடப்படுகிறது
என்று வடிகட்டிய பொய் ஒன்றைச் சொன்னார்.
தங்களுடைய படைகள் காஷ்மீரில் நடத்தும்
கொலைகளுக்கான பழியை மாநில அரசு
மீதே சுமத்தினார் சிதம்பரம். உண்மையில் இந்திய வரலாற்றில் இன்றுவரை
அச்சுறுத்தலாக இருக்கும் இச்சட்டம் - ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவதையோ, பிரச்சனையின் மீது கருத்துத் தெரிவிப்பதையோ,
பிரச்சனையாகப் பேசும் உரிமையையோ தடை
செய்கிறது.
அச்சுறுத்தல் என்று இராணுவம் கருதும்
பட்சத்தில் சந்தேக நபரை வாரண்ட்
இல்லாமல் கைது செய்வதோடு தேவைப்பட்டால்
துப்பாக்கிப் பிரயோகமும் செய்யலாம். காஷ்மீரில் பல்லாயிரம் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை இச்சட்டத்திற்கு பலியாக்கியிருக்கிறார்கள். காணாமல் போனவர்கள், கடத்தி
பாலியல் வன்முறைக்குள்ளாகி கொல்லப்பட்டவர்கள் என்று விரியும் இந்த
பயங்கரங்களை நடத்த அரசே பல
சட்டவிரோதமான முகாம்களையும் நடத்தி வந்தது. ஆயுதப்
படை சிறப்பதிகாரச் சட்டத்தோடு மேலும் பல கொடிய
சட்டங்களும் காஷ்மீரில் பிரயோகிக்கப்பட்டதுண்டு. இன்று வரை இந்த
நிலை மாறவில்லை. ஆள் தூக்கிச் சட்டங்களில்
இருந்து தங்களின் சந்ததியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் ஆயுதப் போராட்டத்தை
கைவிட்டனர். சையது அலிஷா கிலானி,
யாசின் மாலிக், மிர்வேஸ் உமர்
ஃபரூக் போன்ற தனிநாடு கோரும்
தலைவர்கள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு
ஜனநாயக வழிக்குத் திரும்பினர்.

// 2,373 புதைகுழிகளில் (87.9 விழுக்காடு) பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
154 புதைகுழிகளில் இரண்டுக்கு மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. 23 புதைகுழிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட, மூன்றில் இருந்து 17 வரையிலான சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. //
// இப்புதை குழிகள், வயல்வெளிகள்,
பள்ளிகள், வீடுகள், பொதுவான சமூக நிலங்களில்
அமைந்துள்ளன என்பதால், உள்ளூர் சமூகத்தினர் மீது
இதன் தாக்கம் பயங்கரமானதாகக் காணப்படுகிறது.
இந்திய ராணுவமும், கூட்டு காஷ்மீர் காவல்
துறையினரும் புதைகுழியில், சவக்குழியில் புதைக்கப்பட்ட முகம் தெரியாத அடையாளம்
காணப்படாத சடலங்கள் யாவும் அயல் நாட்டு
தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் சடலங்கள்
என்று வழக்கமாக கூறி வருகின்றனர். இவ்வாறு
உயிரிழந்தவர்கள் எல்லைப் பகுதிகளின் வழியாக
காஷ்மீரத்திற்குள் ஊடுருவும்போது அல்லது காஷ்மீரில் இருந்து
ஆயுதப் பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தானிற்குள்
புக முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதிகாரப்பூர்வ அரசு சொல்லாடல்களில், தற்போதைய
உள்ளூர் காஷ்மீர் குழுக்களின் வன்முறையற்ற அரசியல் மற்றும் பிரதேச
சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை, உள்ளூர் எதிர்ப்பு நடவடிக்கை
போராட்டங்களை, பயங்கரவாத நடவடிக்கைகள் என்று சித்தரித்து எல்லை
தாண்டிய தீவிரவாதத்துடன் இணைத்து ஊதிப் பெருக்கி
குறிப்பிடுகின்றனர். // என்று காஷ்மீரின் பயங்கரநிலையைப்
பட்டியலிடுகிறது சர்வதேச தீர்ப்பாயத்தின் அறிக்கை.
காஷ்மீர் குறித்து பல மனித உரிமை
ஆர்வலர்கள் காட்டும் சித்திரம் இந்திய அரசின் உண்மையான
முகத்தை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
இந்திய துணை இராணுவப் படையினருடன்
மோதல் என்ற பெயரில் காஷ்மீரில்
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 70,000. பல நேரங்களில் இந்திய
இராணுவம் கொலைகளைச் செய்து விட்டு அந்தப்
பழியை காஷ்மீர் போராளிக் குழுக்கள் மீதும் போட்டுள்ளது. பத்ரபால்
படுகொலை, சட்டீஸ்புறா சீக்கியர் படுகொலைகளைச் செய்தது இந்தியப் படைகள்.
பழியோ காஷ்மீர் போராளிக் குழுக்கள் மீது. உச்சக்கட்டமாக 1996-ல்
காஷ்மீரின் மனித உரிமைப் போராளியான
அன்டிராபியைக் கொன்றதிலிருந்து 2009ல் சோபியான் மாவட்டத்தில்
நிலோபர் ஜாண், அசியா ஜாண்
படுகொலை வரை இந்திய ராணுவத்தின்
கொடுமை விரிந்து செல்கிறது.
பனிலிங்கமும், பார்ப்பன இந்து மத வெறியும்
காஷ்மீரின் நீண்டகால காஷ்மீர் வரலாற்றில் பௌத்தர்களும், சீக்கியர்களும், இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாக வாழ்ந்து வழிபட்ட
வரலாறு உண்டு. பெரும்பான்மை மக்கள்
இஸ்லாமியர்களாக இருந்தபோதிலும் அவர்கள் டோக்ரா வம்சத்தைச்
சார்ந்த ஒரு இந்து மன்னனின்
ஆளுகையின் கீழ் இருந்ததே காஷ்மீர்
மக்களின் மதச்சார்பின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இன்று
இந்துக்களின் புனித யாத்திரைத் தலங்களுள்
ஒன்றாக மாறி இந்திய நிறுவனங்களின்
ஸ்பான்சர் பயணங்களுள் ஒன்றாக மாறிவிட்ட அமர்நாத்
பனிலிங்கக் கோவிலை 1860களில் கண்டுபிடித்ததே முஸ்லீம்
இன ஆட்டிடையவர்களான மாலிக்குகளே. அவர்கள் 150 ஆண்டுகளாக அதை தங்களின் கட்டுப்பாட்டில்
வைத்திருந்து அந்த பனிலிங்கத்தை இந்து
மக்களின் வழிபாட்டிற்காகக் கொடுத்ததோடு காலம் காலமாக பனிலிங்கத்தை
வழிபட வரும் இந்து யாத்ரீகர்களுக்கு
எல்லா உதவிகளையும் செய்து வந்தார்கள். எந்தவிதமான
மத வேற்றுமைகளும் இல்லாமல் இந்துக்களும், முஸ்லீம்களும் வாழ்ந்து வந்த நிலையில்தான் அமர்நாத்
கோவிலை வைத்து ஓர் இந்து
அரசியலை நுழைத்தது இந்தியா. 2000-ஆம் ஆண்டில் அந்தக்
கோவிலுக்கான அறங்காவல் கமிட்டியை உருவாக்க, இதுவரை அந்த கோவிலை
பேணிப்பாதுகாத்து வந்த அந்த ஏழை
முஸ்லீம் மாலிக்குகள் கோவில் மீதான் உரிமையை
இழந்தார்கள். அமர்நாத் கோவிலுக்கு நிலம் வழங்கும் முடிவை
காஷ்மீர் மாநில அரசு எடுக்க,
காஷ்மீர் மக்கள் அதற்கு கடும்
எதிர்ப்புத் தெரிவிக்க, இந்து மத வெறியர்கள்
அதைச் சாட்டாக வைத்து இந்தியா
முழுக்க சிறுபான்மை வெறுப்பரசியலை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றனர்.
இந்திய அரசால் காஷ்மீருக்குள்
நேரடியாக எவ்விதமான குடியேற்றங்களையும் செய்ய முடியாது. அரசியல்
சட்டத்தின் 370-வது பிரிவு அதைத்
தடுப்பதால் காஷ்மீரிகளின் நிலங்களை அபகரிக்க இந்தியா பயன்படுத்தும் ஒரு
தந்திரம்தான் இப்போது பனிலிங்க வழிபாடு.
துவக்கத்தில் 20,000 பேர் மட்டுமே வந்துபோன
லிங்க வழிபாட்டுக்கு இந்தியாவின் வேறு எந்த புனித
தலங்களுக்கும் செய்யாத ஏற்பாடுகளை இந்தியா
செய்துள்ளது. தங்கும் கூடாரங்கள், ஹெலிஹாப்டர்
வசதி போன்றவைகளைச் செய்துள்ள இந்தியா, அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) ஒன்றை உருவாக்கி
அமர்நாத் வழிபாட்டை நாற்பது நாள் திருவிழாவாகக்
கொண்டாடுகிறது. இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணம் எப்படி
புனிதக் கடமையோ அப்படியே இந்துக்களுக்கு
அமர்நாத் லிங்க யாத்திரை என்று
இந்துப் பாசிஸ்டுகள் பிரச்சாரம் செய்கிறார்கள். பெரும்பான்மை இந்துச் சமூகத்திடம் சமீப
ஆண்டுகளாக இந்தக் கோவிலுக்கு பெரும்
வரவேற்பு. ஆனால் கடந்த பதினைந்து
ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தை
கைவிட்டிருந்த காஷ்மீரிகள், பெருந்திரள் மக்கள் போராட்டத்தில் ஒன்றிணைந்தது
இந்த பனிலிங்க கோவில் பிரச்சனையால் ஏற்பட்ட
சோபியான் (2009 மே) படுகொலைகளில் இருந்துதான்.
பண்டிட்கள்
கடந்த இருபதாண்டுகளில் இருபது
லட்சம் பண்டிட்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பதட்டச் சூழலால்
வெளியேறியிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் குடிமைச்
சமுதாய கூட்டமைப்பு 21-10-2010 அன்று டில்லியில் நடத்திய
கருத்தரங்கில் பேசிய அருந்ததிராயின் கருத்தில்
இருந்தே அம்பைக்கும் இங்குள்ள இந்திய தேசியவாதிகளுக்கும் மூளை
சூடேறுகிறது. ஆனால் ஹுரியத் மாநாடு
அமைப்பின் தலைவர் ஜீலானி அதே
கூட்டத்தில் இந்துக்கள், சீக்கியர்கள், பண்டிட்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள்
அனைவருக்கும் விடுத்த அழைப்பையோ அனைத்து
மக்களையும் சமத்துவமாக மதித்து காஷ்மீர் போராட்டம்
முன்னெடுக்கப்படும் என்று அறிவித்ததையோ தந்திரமாக
இந்திய ஊடகங்கள் மறைத்து விட்டன. இது
தொடர்பாக பேராசியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள
‘காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே?’
நூலிலும், பெரியவர் எஸ்.வி. ராஜதுரை
எழுதியுள்ள ஷோபியான் நூலிலும் அண்மைத் தரவுகளோடு ஏராளமான
ஆதாரப்பூர்வத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
ஆனால் காஷ்மீர் மக்களின்
தேசிய இன விடுதலைப் போராட்டத்தை
இந்து, முஸ்லீம் பிரச்சனை என்றும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமான
பிரச்சனை என்றும், பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் நடைபெறும் பிரிவினைவாதிகளின்
கிளர்ச்சி என்றும், ஜிகாதிகளின் பயங்கரவாதம் என்றும் தொடர்ந்து நச்சுக்
கருத்துக்களை பரப்பும் ஊடகங்கள், அறிவுஜீவிகள் பொதுவாகவே தங்களின் முஸ்லீம் வெறுப்பு அரசியலை முன்னெடுக்க அதற்கு
உறுதுணையாக காஷ்மீரில் இருந்து வெளியேறி இப்போது
டில்லியில் வசித்து வரும் பண்டிட்டுகளை
கையில் எடுத்துக் கொள்வார்கள். காஷ்மீர் பண்டிட்கள் மூஸ்லீம்களால் வெளியேற்றப்பட்டனர் என்று கதை கட்டி
தங்களின் வழமையான முஸ்லீம் வெறுப்பை
இந்து மனதில் நின்று நிறுவுகின்றனர்.
காஷ்மீர் பண்டிட்கள் மட்டுமல்ல முஸ்லீம்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட எல்லா மக்களுமே இந்திய,
பாகிஸ்தான் படைகளாலும் போராளிக் குழுக்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீரில் எந்த
சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்காத கவனிப்பும் அக்கறையும் பண்டிட்களுக்கு மட்டும் கிடைக்கும் ரகசியம்
நேருவின் காலத்தில் இருந்தே துவங்கி விட்டது.
தொண்ணூறுகளில் காஷ்மீரில் ஆளுநராக ஜக்மோகன் இருந்தபோது
அவருடைய தூண்டுதலின் பேரிலேயே பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டு
டில்லிக்கு அனுப்பப்பட்டனர். அப்படி அனுப்பபட்ட பண்டிட்களுக்கு
இந்திய அரசாங்கம் டில்லியில் கடைகளையும், குடியிருப்புகளையும் ஒதுக்கிக் கொடுத்திருப்பதோடு, அரசு வேலைகளையும் வழங்கியிருக்கிறது.
காஷ்மீரில் அவர்கள் அரசு ஊழியர்களாக
பணி செய்திருந்தால் அதை ஓய்வூதியமாகவும் கொடுக்கிறது.
இலங்கையின் இனப்பிரச்சனை காரணமாக தமிழகம் வந்த
ஈழ அகதிகளை இந்தியா திறந்தவெளிக்
கழிப்பிடங்களில் கொட்டி வைத்திருப்பது போல்தான்
பர்மா, ஆப்கான், வங்க அகதிகளையும் வைத்திருக்கிறது.
திபெத் அகதிகள், காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்கள்
இந்த இரண்டு அகதிகளுக்கும்தான் இந்தியா
ஒப்பீட்டளவில் வசதியான ஒரு வாழ்வை
ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.
சீனாவுடனான தனது எல்லைப் பிரச்சனையில்
திபெத்தை ஒரு துருப்புச் சீட்டாக
பயன்படுத்தும் இந்தியா திபெத் அகதிகளை
ராஜமரியாதையோடு கவனித்துக் கொள்கிறது. காஷ்மீரில் தன் ஆக்ரமிப்பு இராணுவத்திற்கு
எதிராக காஷ்மீரிகள் போராடுவதால் பண்டிட்டுகளை இந்துத்துவப் பாதைக்கு திருப்புவதன் மூலம் காஷ்மீரிகளுக்குள் இந்து
முஸ்லீம் பிரிவினையைத் தூண்டுகிறது இந்தியா. அந்தத் தந்திரத்தின் விருந்தோம்பலும்
உயர்குடி அங்கீகாரமும் இணைந்துதான் பண்டிட்களுக்கு டில்லியில் வசதியான வாழ்வை ஏற்பாடு
செய்து கொடுத்திருக்கிறது. ஆனால் எப்போதும் பெரும்பான்மை
முஸ்லீம் மக்கள் பண்டிட்களை தாக்கியதோ
அவர்களுக்கு எதிரான வன்முறையிலோ இறங்கியதில்லை.
ஆயுதக் குழுக்கள் போராடிய காலத்தில் எப்படி
சில அப்பாவி முஸ்லீம் குடும்பங்கள்
உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில்
கொல்லப்பட்டார்களோ அப்படியே சில பண்டிட்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இன்று வெளியேறிய பண்டிட்களின் வீடுகள் இராணுவ முகாம்களாக
மாற்றப்பட்டிருக்கும் நிலையில் டில்லியில் வாழும் அவர்களோ டில்லியில்
இந்தியாவின் தேசியக் கொடிகளைப் பிடித்தபடி
காஷ்மீர்களுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்து முஸ்லீம் என்று இந்துப் பாசிசம்
விதைத்த நச்சுக் கருத்துக்கு அவர்கள்
ஆட்பட்டிருக்கிறார்கள்.
காஷ்மீர் மக்கள் வன்முறை
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்
வரை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை இறந்து
போன ஒன்றாகவே கருதினார்கள் பலரும். மறுகாலனியாதிக்கத்தின் விளைவாக மக்கள்
எதிர்ப்பியக்கங்கள் சாத்தியமற்றுப் போய் விட்டது என்கிற
எண்ண ஓட்டங்களுக்கும் அதில் மறைந்திருக்கும் சில
உண்மைகளுக்கப்பால் - 2009 மே மாதம் ஷோபியான்
பகுதியைச் சேர்ந்த நீலோபர் ஜான்
மற்றும் அவரது மைத்துனி அசியா
ஜான் என்கிற இரண்டு பெண்கள்
இந்திய இராணுவத்திரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு
ஆப்பிள் தோட்டத்தில் வீசப்பட்டிருப்பதாக செய்திகள் பரவ இந்தியாவுக்கு எதிரான
போராட்டங்கள் சோபியான் மாவட்டத்தில் வெடித்தது. அதற்கு முன்னர் பனி
லிங்கக் கோவில் பிரச்சனையை கையில்
எடுத்துக் கொண்ட இந்துத்துவ சக்திகள்
காஷ்மீர் மக்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கியபோதும்
அந்த மக்கள் ஒற்றுமையாகவே நின்றார்கள்.
சுமார் 47 நாட்களாக நடந்த மாபெரும் மக்கள்
கிளர்ச்சி ஒட்டுமொத்த பள்ளத்தாக்கையும் பற்றிக் கொண்டது. ஒட்டு
மொத்த காஷ்மீரிகளும் இன்று இந்தியாவுக்கு எதிராக
திரண்டு நிற்கும் இன்றைய போராட்டம் உருவாகி
சுமார் இரண்டாடுகாலம் ஆகப் போகிறது.

ஆயுதக் குழுக்கள் இயங்கிய
எண்பதுகள் காலத்தில் இந்தியாவின் எல்லா அடக்குமுறைகளுக்கும் நியாயம்
கற்பிக்க போதுமான காரணங்கள் இருந்தன.
2009-க்குப் பின்னர் தன்னெழுச்சியான மக்கள்
போராட்டங்களை ஒடுக்க - பெருந்தொகையான இராணுவத்தினர் மீது கல்லெரியும் காஷ்மீரிகளை
- ஒடுக்க இந்தியாவிடம் காரணங்கள் இல்லை. கடந்த காலங்களைக்
காட்டிலும் முழுமையான பெருந்திரள் மக்கள் போராட்டமாக காஷ்மீர்
போராட்டம் உருவாகி நிற்கிற இந்த
நிலையில், ஆயுதக் குழுக்களை கையாண்ட
அளவுக்கு இந்தியாவால் மக்கள் வன்முறையை கையாள
முடியவில்லை. ஆயுதக் குழுக்களை அமைதியாக்கியதுபோல
அவ்வளவு எளிதான விஷயம் இதுவல்ல
என்பதைப் புரிந்து கொண்ட இந்தியா சுமார்
ஆறு லட்சம் துருப்புகளை காஷ்மீருக்கு
அனுப்பியுள்ளது. நேரடியாக மக்களை, பெண்களை, சிறுவர்களை
சுட்டுக் கொல்லும் அரசு இப்போது வேறு
விதமான வழிமுறைகளைக் கையாள்கிறது. ஒன்று காஷ்மீருக்கென்று இருக்கக்
கூடிய 370- பிரிவை ரத்து செய்து
காஷ்மீரை இந்தியப் பெருமுதலாளிகளின் கட்டுக்குள் கொண்டு வருவது. இன்னொன்று
தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக்
கட்சி போன்ற செல்வாக்கிழந்த கட்சிகளின்
துணையோடு காஷ்மீரிகளின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து நிலைகுலைய
வைப்பது. இதுதான் இந்தியாவின் திட்டங்கள்.
கடந்து போன சுதந்திர
தின விழாவில் டில்லியில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங்
"காஷ்மீர் வன்முறைகள் கவலையளிக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒன்றுபட்ட பகுதி என்பதை ஏற்றுக்
கொண்டு வன்முறையைக் கைவிட்டு வருகிறவர்களிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும்"
என்று பேசினார். இந்தப் பேச்சில் எங்காவது
காஷ்மீரிகளின் நீண்டகால கோரிக்கையான சுதந்திர காஷ்மீர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறதா? ஆனால் அதே
நாளில் காங்கிரசோடு கூட்டணி ஆட்சி நடத்திக்
கொண்டிருக்கும் பரூக் அப்துல்லாவின் மகனும்
வாரிசு அரசியலில் வந்து இன்று காஷ்மீரின்
முதல்வராக இருக்கும் உமர் அப்துல்லா பேசும்போது
//காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து அளிக்கத் தயாராக உள்ளதாக பிரதமர்
மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்த
வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும். தற்போது ரம்ஜான் புனித
மாதம் நடக்கிறது. இதுபோன்ற புனிதமான காலத்தில், பிரிவினைவாதிகள் வன்முறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும். அதே நேரத்தில் மத்திய
அரசுக்கும், காஷ்மீர் மக்களுக்கும் இடையேயான நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை சரிசெய்ய வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மாநிலத்தில்
வன்முறை அதிகரித்து வருகிறது.// என்று பேசுகிறார். மன்மோகன்
சொல்லாத ஒன்றைச் சொன்னதாக உமர்
காஷ்மீரில் பேசுவதும், காஷ்மீரில் ஆயுதக் குழுக்களின் வன்முறை
எதுவும் இல்லாத நிலையில் பிரிவினைவாதிகள்
என்று சிதம்பரமும், மன்மோகனும், உமர் அப்துல்லாவும் சொல்வது
யாரை?
காஷ்மீரில் இந்தியா முன்னெடுக்கும் பல்வேறு
நாடகங்களில் சமீபமாக இந்தியா அறிவித்ததுதான்
காஷ்மீருக்கான எட்டு அம்சத் திட்டங்கள்.
அதன் ஒரு பாத்திரத்தில் நடிக்கும்
உரிமை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டோரின்
குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம்
நிதி உதவியை இந்தியா வழங்கியிருந்தது.
ஆனால் அந்த உதவிகளை காஷ்மீர்
மக்கள் நிராகரித்து விட்டார்கள். நூற்றுக்கணக்கான மக்களை, சிறுவர்களைக் கொன்று
நரவேட்டை ஒன்றை நடத்தி முடித்து
விட்டு இந்தியா வழங்குவதாகச் சொன்ன
பணத்தை காஷ்மீர் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் சி,பி.எம், சி.பி.ஐ உறுப்பினர்களோடு
நம்மூர் திருமாவளவனும் சென்று வந்தார். இந்தியாவின்
சுதந்திர காலத்தை ஒத்த நீண்ட
வரலாற்றைக் கொண்ட காஷ்மீரிகளின் தனி
நாட்டுக் கோரிக்கையை ஏதோ புதிதாய் உருவான
ஒன்று என்பதுபோல் காட்ட முயல்கிறது இந்தியா.
இக்குழுவை வழக்கம் போல காஷ்மீர்
மக்கள் நிராகரித்தபோதும் தேசிய மாநாட்டுக் கட்சியினர்
ஒரு பக்கம் குழுவை வரவேற்று
விட்டு இன்னொரு பக்கம் மக்களை
இக்குழுவினர் சந்திக்க விடாமல் செய்தனர். ஹூரியத்
மாநாட்டுத் தலைவர்கள் கூட முதலில் இக்குழுவினரைச்
சந்திக்க மறுத்து விட்டனர். இந்த
நாடகம் முற்றிலும் அம்பலமாகிவிடாதபடி காப்பதற்காக சி.பி.ஐ.,
சி.பி.எம்., உள்ளிட்ட
சில கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வீட்டுக் காவலில்
வைக்கப்பட்டிருந்த ஹுரியத் மாநாட்டுக் கட்சியைச்
சேர்ந்த மிர்வாயிஸ் உமர் பாரூக், கீலானி
மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை
முன்னணியின் தலைவர் யாசின்மாலிக் ஆகியோரைச்
சந்தித்தனர்.
இச்சந்திப்பின்பொழுது, யாசின் மாலிக்கும் மிர்வாயிஸ்
உமர் பாரூக்கும் இணைந்து, "காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா மற்றும் காஷ்மீரைச்
சேர்ந்த கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைக் கொண்ட
குழு அமைக்கப்பட வேண்டும்" எனக் கோரினர். பேச்சுவார்த்தைகளைத்
தொடங்குவதற்கு அடிப்படையாக, "காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக இந்தியா ஏற்றுக் கொள்ள
வேண்டும்; மனித உரிமை மீறலில்
ஈடுபட்ட இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்
கீலானி. இக்குழுவினர் எந்தவிதமான அறிக்கையை இந்தியாவிடம் அளிப்பார்கள் என்பது புரியாத புதிராக
உள்ளது. ஒரு வேளை ஆயுதப்படை
சிறப்பதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்
என்று இக்குழு அறிக்கை அளிக்கும்
பட்சத்தில் இந்தியா அச்சட்டத்தை வாபஸ்
வாங்கி விடுமா? எட்டு அம்சத்
திட்டத்தை அறிவித்த சிதம்பரமே சொல்லி விட்டார் சிறப்பதிகாரச்
சட்டம் தொடர்பாக மாநில அரசு முடிவு
எடுக்கலாம் என்று. எவ்வளவு பொய்கள்,
பித்தலாட்டங்கள்!!
இதுபோன்ற ஒரு அனைத்துக் கட்சிக்
குழுவை இலங்கைக்கு அனுப்பக் கோரியபோது இறையாண்மையுள்ள இன்னொரு தேசத்திற்குள் இந்தியா
தலையிடாது என்று தமிழகத்தின் கோரிக்கையை
தட்டிக் கழித்த இந்தியா, இனப்படுகொலை
போர் முடிவுக்கு வந்த பின்னர் திமுக,
காங்கிரஸ் கூட்டணி எம்பிக்களை சுற்றுலாப்
பயணம் போல இலங்கைக்கு அனுப்பியதை
இங்கே பொருத்திப் பார்க்கலாம். அவர்கள் கொடுத்த அறிக்கை
என்னவென்றாவது நமக்குத் தெரியுமா? அந்த அறிக்கையின் அடிப்படையில்
இந்தியாவை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்று
சொன்ன கருணாநிதியின் வார்த்தைகள் என்னவானது?
காஷ்மீர் தீர்வுக்கு தொழிலதிபர்கள் குழு
நீண்டகால அரசியல் பிரச்சனையான காஷ்மீர்
பிரச்சனைக்கு எட்டு அம்சத் திட்டத்தின்படி
தீர்வு என்று அறிவித்த இந்தியா
இறுதியாக காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக
முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைவரும்
முன்னாள் ஆந்திர மாநில ஆளுநருமான
சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை
அமைத்திருக்கிறது. இக்குழுவில் இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, சிஐஐ
அமைப்பின் முன்னாள் தலைவர் தருண் தாஸ்,
காஷ்மீர் பிரிவு தொழில் வர்த்தக
சம்மேளனத்தின் தலைவர் ஷகீல் கலாந்தர்
நந்தகுமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஜம்மு-
காஷ்மீர் மாநில அரசு சார்பில்
ஒரு பிரதிநிதியும் குழுவில் இடம் பெறுவார்.
சிஐஐ (Confederation of Indian
Industry) என்னும் அமைப்பு இந்திய தொழிலதிபர்களாலும்
ஐப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன் போன்ற நாடுகளில்
உள்ள பன்னாட்டு தொழிலதிபர்களாலும் நிர்வகிக்கப்படுகிற இந்திய தொழில் முனைவோருக்கான
கூட்டமைப்பு. தாதுக்களை தோண்டி எடுப்பது, சுரங்கம்
அமைப்பது, தகவல் தொழில் நுட்பத்துறை
முதலீடு போன்ற தொழில்களில் முதலீடு
செய்யும் தொழிலதிபர்களின் கைகளில் இப்போது காஷ்மீருக்கான
தீர்வு. இந்த தொழில் முதலைகளுக்கும்
காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம்? காஷ்மீர்
பிரச்சனையின் தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் உரிமையை இந்தத் தொழிலதிபர்களிடம்
வழங்கியதன் மூலம் ஒட்டுமொத்த காஷ்மீரையும்
இன்னொரு தண்டகாரண்யாவாக மாற்ற இந்தியா முயல்கிறது
என்றே தெரிகிறது.
காஷ்மீரில் இந்தியாவைச் சார்ந்த எவரும் நிலம்
வாங்க முடியாதபடி அரசியல் சட்டத்தின் 370 பிரிவு
காஷ்மீர் மக்களுக்கான நில உத்திரவாதத்தை வழங்கி
வரும் நிலையில் காஷ்மீர் இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றம், உருவாக்கப்பட வேண்டிய வேலை வாய்ப்புகள்,
தொழிற்சாலைகள் குறித்து இக்குழு ஆராயுமாம். எந்த
மாதிரியான தொழில்களை காஷ்மீரில் தொடங்கலாம் என்று முடிவு செய்து
இவர்கள் கொடுக்கிற அறிக்கையை வைத்து இந்தியா காஷ்மீர்
பிரச்சனையைத் தீர்க்குமாம். இந்தியப் பெருமுதலைகள் காஷ்மீரில் ஆப்பிள் தோட்டங்களை வாங்கிக்
குவிக்கவும், மிஞ்சியிருக்கும் காஷ்மீர்களின் நிலங்களை அபகரிக்கவும் தடையாக இருக்கிற 370-வது
பிரிவை நீக்கும் நோக்கிலேயே இப்போது தொழிலதிபர்களை காஷ்மீர்
பிரச்சனைக்குள் இறக்கியிருக்கிறார்கள்.
நிலங்களை அபகரித்து, வளங்களை கொள்ளையடித்துச் செல்லும்
பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து தங்களையும் தங்களின்
நிலங்களையும் காத்துக் கொள்ள தண்டகாரண்யா மக்கள்
போராடும் இதே நாட்களில்தான் மக்கள்
நிலங்களை அபகரித்து அவர்களை நிலமற்றவர்களாக்கும் ஒரு
யுத்த தந்திரத்தை காஷ்மீருக்கும் விரிவுபடுத்துகிறது இந்தியா. தண்டகாரண்யா, ஈழம் இந்த இரண்டிலுமே
மக்கள் நிலங்களுக்காகப் போராடும் ஒரு சூழலை நாம்
காண்கிறோம். மக்களின் உழைப்பின் மீதான் உரிமையும் நிலத்தின்
மீதான உரிமையும் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின்
கைகளில் காஷ்மீர் தீர்வு செல்வது மிகப்
பெரிய அழிவுக்கே இட்டுச் செல்லும்.
அருந்ததிராயும் ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளும்

அம்பை அவர்களே!! காஷ்மீர்
இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது
என்றால் எப்போது இருந்தது என்பதைச்
சொல்ல வேண்டியது உங்களின் பொறுப்பு. அல்லாமல் அரசு இயந்திரத்திற்கு ஆதரவாக
இந்திய இறையாண்மையின் இதயத்தில் நின்று நீங்கள் இந்து
மனதோடு அருந்ததிராய் மீது பாய்வதால் உங்களுக்கு
இரண்டு தயிர்சாதங்களையும் தொட்டுக் கொள்ள மாவடுவையும் இந்தியா
பரிசளிக்கும்; அருந்ததிக்கு துப்பாக்கிகளை மட்டுமே பரிசளிக்கும். அருந்ததிக்கு
மட்டுமல்ல ஜனநாயகத்திற்காய்ப் போராடும் எவர் ஒருவருக்கும் அப்படித்தான்.
மற்றபடி காலச்சுவடு கட்டுரையில்
மாலதி மைத்ரி ஈழப் போராட்டத்தின்போது
அறிவுஜீவிகளின் அணுகுமுறை குறித்து மிகச் சரியாகவே கணித்துள்ளார்.
ஈழ மக்களின் தேசிய இன விடுதலைக்
கோரிக்கை புலிகளோடு துவங்கியதும் இல்லை புலிகளோடு முடிந்து
போவதும் இல்லை. காஷ்மீரில், பாலஸ்தீனத்தில்,
ஏன் அமெரிக்க ஆக்ரமிப்பு ஆப்கானில் என உலக விஷயங்களை
அணுகும்போது - அங்கெல்லாம் அடிப்படைவாதக் குழுக்களின் ஆயுத வன்முறையும் ஒரு
அங்கமாக இருந்தாலும் - அதை தமிழக அறிவுஜீவிகள்
எந்த முன்நிபந்தனையும் இன்றி ஆதரிக்கிறார்கள். ஆனால்
ஈழம் என்று வரும்போது மட்டும்
இவர்கள் ஆயிரம் தத்துவ அளவீடுகளைக்
கொண்டு, குழப்பியடிக்கிறார்கள். வாயைத் திறந்தால் விடுதலைப்
புலிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்;
இலங்கை அரசு குறித்து மௌனம
சாதிக்கிறார்கள். தண்டகாரண்யாவில் போராடும் மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல, மேற்குவங்கம் தொடங்கி கேரளாவின் முத்தங்கா
வரையிலுமான பழங்குடி மக்களின் போராட்டமும் கூட ஈழப் போராட்டத்தைப்
போன்றதல்ல. கால ஓட்டத்தில் ஈழப்
போராட்டம் இன்று நிலத்திற்கான போராட்டமாக
உருமாற்றம் அடைந்திருந்தாலும் கூட அது ஈழ
மக்களின் தேசிய இன விடுதலைப்
போராட்டமே. அந்த வகையில் மாலதியின்
கருத்தை நாம் ஆதரிக்கிறோம். காஷ்மீருக்கு
எப்படியோ அதே நீதிதான் ஈழத்திற்கும்.
உதவிய நூல்களும் கட்டுரைகளும்
................................................................
1. இந்தியாவில் தேசிய இனச் சிக்கலும் ஆளும் வர்க்கங்களும்- சுனித் குமார் கோஷ்.
2.ஜவஹர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள் - அர்ஜூன் தேவ்.
3. நள்ளிரவில் சுதந்திரம் - டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ்,
4. காஷ்மீரின் தொடரும் துயரம் -உண்மை அறியும் குழுவின் ஆய்வறிக்கை, விடியல் பதிப்பகம்.
5. காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே? அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.
6. http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne280810Iamapracifist.asp
7. சாம்பல் மூடிய நெருப்பு -டி.அருள் எழிலன்.
8. ஷோபியான் - காஷ்மீரின் கண்ணீர் கதை- எஸ்.வி. ராஜதுரை.
................................................................
1. இந்தியாவில் தேசிய இனச் சிக்கலும் ஆளும் வர்க்கங்களும்- சுனித் குமார் கோஷ்.
2.ஜவஹர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள் - அர்ஜூன் தேவ்.
3. நள்ளிரவில் சுதந்திரம் - டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ்,
4. காஷ்மீரின் தொடரும் துயரம் -உண்மை அறியும் குழுவின் ஆய்வறிக்கை, விடியல் பதிப்பகம்.
5. காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே? அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.
6. http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne280810Iamapracifist.asp
7. சாம்பல் மூடிய நெருப்பு -டி.அருள் எழிலன்.
8. ஷோபியான் - காஷ்மீரின் கண்ணீர் கதை- எஸ்.வி. ராஜதுரை.
இை எழுதிய நீயும் ஒரு கம்யூனிச தீவிரவாயே
ReplyDelete